UNHCR தூதுக்குழு பாதுகாப்பு செயலாளரை சந்தித்தது

செப்டம்பர் 25, 2025

சர்வதேச அமைதி காக்கும் பணிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மனித உரிமைகள் முயற்சிகளை வலுப்படுத்துதல் குறித்து கலந்துரையாட ஐக்கிய நாடுகள் (UN) சபையின் உயர்மட்டக் தூதுக்குழு நேற்று (செப்டம்பர் 24) பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche மற்றும் ஆசியா பசுபிக் பிராந்தியத்திற்கான UNHCR பிராந்திய பணியகத்தின் பிரதி இயக்குநர் Ms. Karen Whiting (பாதுகாப்பு மற்றும் தீர்வுகள்) தலைமையிலான தூதுக்குழுவை, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) வரவேற்றார்.

ஐக்கிய நாடுகள் (UN) அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கை படையினரை ஈடுபடுத்தல், அதற்கான பின்புல பரீட்சித்தல் செயல்முறையை விரைவுபடுத்துதல், சிறப்பு பயிற்சித் திட்டங்களை நடத்துதல் மற்றும் ஐக்கிய நாடுகள் தரநிலைகளுக்கு ஏற்ப தேவையான உபகரணங்களை வழங்குவதை உறுதி செய்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மனித உரிமைகளை நிலை நிறுத்த இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை ஏற்றுக்கொண்ட திரு. Franche சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு நன்றி தெரிவித்தார். உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு இணங்கும் வகையில் இலங்கையின் அமைதி காக்கும் திறனை வலுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் தொடர்ச்சியான ஆதரவை பிரதிநிதிகள் குழு இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியது.

பாதுகாப்பு செயலாளர், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவை வரவேற்றதுடன், தரமான தொழில்முறை, பொறுப்புக்கூறல் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறை கட்டமைப்புகளுக்கு அமைவாக, சர்வதேச அமைதி காக்கும் முயற்சிகளுக்கு இலங்கை தனது பங்களிப்பை மேலும் முன்னெடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இச்சந்திப்பு இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை வலியுறுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.