நிலச்சரிவு தணிப்பு திட்டத்தின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம்
DMCயில் நடைபெற்றது

செப்டம்பர் 27, 2025

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேற்று (செப்டம்பர் 26) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் (DMC) நடைபெற்ற, Reduction of Landslide Vulnerability by Mitigation Measures (RLVMM) கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு (AMC) கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் நிலச்சரிவு தணிப்பு தொடர்பான RLVMM திட்டம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் (NBRO) செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு இலங்கை அரச (GoSL) நிதியுதவி அளிப்பதுடன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) கடன் வழங்குகிறது.

கூட்டத்தின் போது பாதுகாப்பு செயலாளர், திட்டத்தின் செயட்பாட்டு முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தார். மேலும் நாட்டில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை பாதுகாப்பதற்கு நிலச்சரிவு தனிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். தேவைப்படும் உதவிகளை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதற்காக செயல்படுத்தலை விரைவுபடுத்துமாறு அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுக்கும் அவர் அறிவுறுத்தினார்.

NBRO இன் பணிப்பாளர் நாயகம், பொறியியலாளர் (Dr.) ஆசிரி கருணாவர்தன மற்றும் திட்ட இயக்குநர் திரு. விராஜ் டயஸ் ஆகியோர், திட்டத்தின் முன்னேற்றம் குறித்த விரிவான கண்ணோட்டத்தை வழங்கி, திட்டத்தை செயல்படுத்தும் போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை கோடிட்டுக் காட்டினர்.

திட்டத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட அதிகாரிகளும் இது தொடர்பில் விளக்கமளித்தனர். முன்னேற்றம் மற்றும் முன்னறிவிப்புகள், செயல் திட்ட செயல்படுத்துதல், நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு, அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களை முன்னுரிமையளித்து அடையாளம் காணுதல், திட்டத்தின் இறுதி கட்டமைப்பு, சமூக விழிப்புணர்வு திட்டங்கள் நடத்துதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

பாதுகாப்பு அமைச்சு, NBRO மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.