12வது Galle Dialogue கொழும்பில் ஆரம்பம்

செப்டம்பர் 24, 2025

இலங்கை கடற்படையால் (SLN) ஏற்பாடு செய்யப்பட்ட 12வது "Galle Dialogue" சர்வதேச கடல்சார் மாநாடு இன்று (செப்டம்பர் 24) கொழும்பு வெலிசறையில் உள்ள கடற்படையின் Wave n’ Lake மண்டபத்தில் ஆரம்பமாகியது.

தொடக்க விழாவில் பிரதமர் கௌரவ Dr. ஹரிணி அமரசூரிய கலந்து சிறப்பித்தார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட பிரதம அதிதி உட்பட விசேட விருந்தினரை வரவேற்றார்.

இந்த ஆண்டு "Maritime Outlook of the Indian Ocean under Changing Dynamics" எனும் கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாடு, கடல்சார் நிர்வாகம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, நீலப் பொருளாதாரம் மற்றும் சுத்தமான கடலை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகளின் கீழ் கலந்துரையாடல்கள் நடைபெறும்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோருடன் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இம்மாநாடு பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பில் இலங்கையின் முன்னோடிப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

மாநாட்டின் வரவேற்புரையை கடற்படைத் தளபதி நிகழ்த்தினார் அத்துடன் மாநாட்டின் கருப்பொருளை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ விளக்கினார்.

பிரதமர் சிறப்புரை நிகழ்த்தினார்.
 
இந்த மாநாட்டில் 34 நாடுகளைச் சேர்ந்த கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பை படைத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட கடல்சார் நிபுணர்கள், 14 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆரம்ப நாள் நிகழ்வில் அட்மிரல் வசந்த கரன்னாகொட, முப்படைத் தளபதிகள், முன்னாள் கடற்படை தளபதிகள் மற்றும் இராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில், காலநிலை மாற்றம், கடல்வழி பாதைகளைப் பாதுகாத்தல் மற்றும் பிராந்திய நிர்வாகத்தை முன்னேற்றுதல், பொருளாதார வளர்ச்சியை சுற்றுச்சூழல் பொறுப்புடன் சமநிலைப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய சவால்கள் குறித்து கலந்துரையாடப்படும். 

2010 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, Galle Dialogue சர்வதேச கடல்சார் மாநாடு ஒரு முக்கிய பிராந்திய நிகழ்வாக மாறியுள்ளது. இது இந்து சமுத்திரத்தில் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை வளர்ப்பதற்கான மையத்தளமாக இலங்கையின் நிலையை இது உறுதிப்படுத்துவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.