கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) 18வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பித்தார்
செப்டம்பர் 30, 2025ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) 18வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் (IRC) இன்றைய (செப்டம்பர் 30) தொடக்க விழாவில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக, கலந்து சிறப்பித்தார்.
"அறிவு மற்றும் தேசிய பாதுகாப்பின் எல்லைகளை இணைத்தல்" ("Bridging the Frontiers of Knowledge and National Security") என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாடு, சமகால உலகளாவிய சவால்களுக்கான புத்தாக்க தீர்வுகள் குறித்து நடைபெறும் கலந்துரையாடல்களுக்கு இராஜதந்திரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளைக் ஒன்றிணைக்கும் தலமாக அமையும்.
இங்கு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், தேசிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டினார். KDU ஒரு கல்வி மையமாகவும், ஒரு தேசிய சிந்தனை அமைப்பாகவும் ஆற்றும் இரட்டைப் பங்களிப்புக்கு பாராட்டு தெரிவித்தார். இன்றைய உலகில், "பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவை இனிமேலும் தனித்தனி விடயங்கள் இல்லை; அவை பகிரப்பட்ட ஞானத்தையும் ஒன்றுபட்ட நடவடிக்கையையும் கோரும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட விடயங்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலவின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த அவர், இராணுவ நெறிமுறைகளை கல்வியுடன் ஒன்றிணைப்பதில் பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தைப் பாராட்டினார். KDU, ஆயுதப்படைகளுக்கு சிறந்த ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய தலைவர்களை அளிப்பது மட்டுமல்லாமல், மருத்துவம், பொறியியல், சட்டம் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சிகளையும் உருவாக்குகிறது, இது தேசத்திற்கு பெரிதும் பயனளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கல்விச் சிறப்பு, தேசிய சேவை மற்றும் உலகளாவிய பொறுப்பு ஆகியவற்றில் KDU இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், இந்தாண்டு மாநாடு வெற்றிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பேராசிரியர் பகதூர் சிங் மாநாட்டில் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர், ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு), கடற்தொழில் அமைச்சின் செயலாளர் Dr கோலித்த ஜினதாச, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, பல்கலைக்கழக முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், முன்னாள் வேந்தர்கள் மற்றும் உபவேந்தர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.