பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம்
ஒக்டோபர் 23, 2025துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் கௌரவ ஜனித் ருவன் கொடிதுவக்கு. மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (அக்டோபர் 23) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
நாட்டின் விமானப் போக்குவரத்தின் பிரதான நுழைவாயிலான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பான விடயங்களை மதிப்பாய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பைப் நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச இணைப்பில் அதன் முக்கிய பங்கைக் எடுத்துரைத்தார். விமானப் பயணிகள், விமான சேவைகளின் பணியாளர்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு அனைத்து பங்குதாரர்களினால் வழங்கப்படும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.
சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க ஏற்கனவே உள்ள வழிமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள் மற்றும் அவதானிப்ப்புகளை பகிர்ந்து கொண்டதுடன், தற்போதைய நடைமுறைகளின் செயல்திறனை மேம்படுத்த நடைமுறை தீர்வுகள் தொடர்பிலும் கருத்துக்களைதெரிவித்தனர்.
அனைத்து தொடர்புடைய நிறுவனங்களின் முயற்சிகளையும் நெறிப்படுத்தவும், நெருக்கமான ஒத்துழைப்பை வளர்க்கவும், விமான நிலைய பாதுகாப்பு முகாமைத்துவத்திற்கு சிறந்த மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கவும் ஒரு விரிவான வழிமுறைகளை நிறுவுதல் தொடர்பில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஏனைய உயரதிகாரிகளுடன் விமான நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்கள். இதன்போது தற்போது அங்கு நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தினர்.
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், தேசிய புலனாய்வுத் தலைவர், பொலிஸ் மா அதிபர், இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகம், அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் நாயகம், இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், எல்லை இடர் மதிப்பீட்டு நிலையத்தின் பணிப்பாளர், இராணுவ புலனாய்வுத்துறை பணிப்பாளர் நாயகம், விமானப்படை புலனாய்வு பணிப்பாளர், மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவு (PNB) மற்றும் சிறப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர்கள், தனிமைப்படுத்தல் சேவைகள் பணிப்பாளர் உட்பட சிரேஷ்ட முப்படைகள், பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடளில் பங்கேற்றனர்.