துருக்கியின் 102வது குடியரசு தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சரும்
பாதுகாப்புச் செயலாளரும் கலந்துக் கொண்டனர்

ஒக்டோபர் 30, 2025

துருக்கி குடியரசின் 102வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கையில் உள்ள துருக்கி குடியரசின் தூதரகம், அக்டோபர் 29 அன்று கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது.

இலங்கைக்கும் துருக்கிக்கு இடையிலான நட்புறவுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் இந்நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கௌரவ ஹினிதும சுனில் செனவி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விழாவிற்கு வருகை தந்த கௌரவ விருந்தினர்கள், இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர் அதிமேதகு Lütfü Turgut அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

தமது வரவேற்பு உரையின் போது துருக்கி தூதுவர் நீடித்த இருதரப்பு உறவை வலியுறுத்தி, கல்வி, கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டினார். இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு மூலம் இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் துருக்கியின் ஆர்வத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சுனில் செனவி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாச்சார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பாராட்டினார். எதிர் வரும் ஆண்டுகளில் இந்த பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், எதிர்க்கட்சித் தலைவர், முப்படைகளின் தளபதிகள், இராஜதந்திரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், உட்பட பல சிறப்பு பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.