விசேட தேவைகளையுடைய குழந்தைகளில் கல்வி மற்றும் பராமரிப்பு விடயங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் SERRIC-க்கு விஜயம்
நவம்பர் 03, 2025‘Senehasa’ கல்வி, வளம், ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் (SERRIC), என்பது பாதுகாப்பு அமைச்சு (MoD) மற்றும் ரணவிரு சேவா அதிகாரசபை (RSA) ஆகியவற்றால் நிறுவப்பட்ட விசேட தேவைகளுடைய குழந்தைகளை பராமரிக்கும் ஒரு நிறுவனமாகும். விசேட தேவைகளுடைய குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும், இது அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளைத் தொடர உதவுகிறது. SERRIC நிலையத்தில் முப்படை வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு வழங்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் கவுன்சிலின் தலைவருமான கௌ. சுகத் வசந்த டி சில்வாவுடன் கொழும்பில் உள்ள SERRIC- நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
இதன் போது பிரதி அமைச்சர் நிலையத்தின் வசதிகளை ஆய்வு செய்ததுடன் அங்குள்ள விசேட கல்விச் சூழலையும் கற்றல் முறைகளையும் நேரில் கண்டார். அதைத் தொடர்ந்து SERRIC-ன் கட்டளை தளபதி பிரிகேடியர் உபேந்திர கருணாரத்ன விரிவான விளக்கஉரை ஒன்றையும் வழங்கினார்.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சம், குழந்தைகள் வழங்கிய தொடர்ச்சியான மனதைக் கவரும் நிகழ்ச்சிகள் ஆகும். இது அப்பிள்ளைகளின் செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து விதிவிலக்கான சிறப்பு கல்வியை வழங்குவதில் மையத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நேரடியாக பிரதிபலித்தது.
இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர், விசேட தேவைகள் உள்ள குழந்தைகளின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்ததற்காக SERRIC ஊழியர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். விசேட தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான சேவைகளின் விரிவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, கல்வி, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம் உள்ளிட்ட தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் பிற பங்குதாரர்கள் மற்றும் பாட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சிறப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், நாளையத்தின் ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு பிரதி அமைச்சர் முழு கவனம் செலுத்தி, தாமதமின்றி பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
விசேட தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு சேவை செய்யும் விசேட வசதிகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களை கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா பாராட்டினார். இந்நிலையம் உள்ளடக்கியுள்ள 'அன்பு-கருணை' என்ற ஆழமான கலாச்சாரத்தை அவர் பாராட்டினார், மேலும் இந்த குழந்தைகளுக்காக அளிக்கப்படும் அரசாங்கத்தின் உறுதியான ஆதரவை அவர் பாராட்டினார்.
மாற்றுத்திறனாளி சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட வலுவான மசோதாவின் ஆதரவுடன், புதிய கொள்கை செயல் திட்டத்தை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வசதிகளை மேம்படுத்துவதற்கும் அத்தியாவசிய பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் குறிப்பிடப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் ஒரு சிறந்த மற்றும் ஆதரவான சமூகத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நகர்வைக் குறிக்கிறது.
மேலதிக செயலாளர் பாதுகாப்பு சேவைகள், இராணுவம் மற்றும் விமானப்படை பிரதம அதிகாரிகள், முறைசாரா மற்றும் சிறப்புக் கல்வி பணிப்பாளர், மேற்கு மாகாண ஆயுர்வேத பணிப்பாளர், RSA யின் பிரதி தலைவர் மற்றும் பல சிரேஷ்ட முப்படை அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.