இந்து சமுத்திரத்தில் சுனாமி மாதிரிப் பயிற்சி (IOWave 25) நாளை நடைபெறும்
நவம்பர் 04, 2025"உலக சுனாமி விழிப்புணர்வு தினத்துடன்" இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்து சமுத்திர சுனாமி மாதிரிப் பயிற்சி (IOWave 25) நாளை (நவம்பர் 5) நடத்தப்படும்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் நாட்டின் கடலோரப் பகுதிகளில் இந்தப் பயிற்சி நாளை, புதன்கிழமை காலை நடைபெற உள்ளது.
இது இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு (IOTWMS) மூலம் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையத்தால் (IOC - யுனெஸ்கோ) ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியப் பயிற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்தப் பயிற்சி நாளை காலை 08.30 மணிக்கு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து (5) கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளை மையமாகக் கொண்டு நடக்கவுள்ளது.
UNESCOவின் வழிகாட்டுதல்களின் கீழ் நடத்தப்படும் இந்தப் பயிற்சி, அனர்த்த முகாமைத்துவ நிலையம், வானிலை ஆராய்ச்சி நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம், கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், முப்படைகள் மற்றும் போலிஸ், பாடசாலைகள், சுற்றுலா விடுதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுப்புடன் நடைபெறும்.
இது ஒரு சிறப்பு பயிற்சி மட்டும் என்றும், இது தொடர்பில் பீதியடைய தேவையில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
முன்னறிவிக்கப்பட்ட ஒரு நிலநடுக்கம் தொடர்பில் ஏற்படும் சுனாமி சூழ்நிலையை மையப்படுத்தி இந்தப் பயிற்சி நடத்தப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தொடர்புடைய பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆரம்பப் பயிற்சியை வழங்குதல், தேசிய சுனாமி முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை ஆய்வு செய்து வலுப்படுத்துதல், நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) சரிபார்த்தல் மற்றும் பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய முதல் பதிலளிப்பவர்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துதல் ஆகியவை இப்பயிச்சியின் பிரதான நோக்கங்களாகும்.
மேலும், பயிற்சி காலத்தில் உண்மையான சுனாமி நிலை ஏற்பட்டால், பயிட்சி உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்றும். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்ட நிலையான நடைமுறைகளின்படி அதிகாரப்பூர்வ சுனாமி எச்சரிக்கைகளை வெளியிடும், மேலும் அந்த எச்சரிக்கைகளின்படி பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.