ஆயுதப்படை நினைவு தினம் 2025 மற்றும் பொப்பி மலர் தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் பாதுகாப்பு செயலாளரும் பங்கேற்பு
நவம்பர் 16, 202581வது ஆயுதப் படைகளின் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின விழா இன்று (நவம்பர் 16) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர் நினைவுத்தூபிக்கு அருகில் நடத்தப்பட்டது.
இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கம், ஆயுதப்படைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த வருடாந்த நிகழ்வு, தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இலங்கை போர் வீரர்களின் நினைவு மற்றும் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்றது.
கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கு வருகை தந்த பிரதமர் அமரசூரியவை, இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் லெப்டினன்ட் கேர்ணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) வரவேற்றார்.
நிகழ்வுகள் அனைத்தும் மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமானதுடன், உயிரிழந்த அனைத்து வீரர்களையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதமர், பிரமுகர்கள் மற்றும் இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் போர் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினர். இது உயிரிழந்த வீரர்களின் உயர்ந்த தியாகத்திற்கு நாட்டின் நன்றியுணர்வை அடையாளப்படுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், வெளிநாட்டுத் தூதர்கள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள், இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உயிர் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.