தேசிய அனர்த்த தயார்நிலை திட்டங்களின் முன்னேற்றத்தை பாதுகாப்பு செயலாளர் மதிப்பாய்வு செய்தார்
நவம்பர் 17, 2025இலங்கையின் அனர்த்த தயார்நிலை மற்றும் தணிப்பு முயற்சிகள் குறித்த உயர்மட்ட முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டம் இன்று (நவம்பர் 17) அனர்த்த முகாமைத்துவ பிரிவு காரியாலயத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), வானிலை ஆராய்ச்சி திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO), தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் (NDRSC) மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
காலநிலை மீள்தன்மை மேம்பாடு மற்றும் நிலைப்படுத்தல் திட்டம் (CRISMP), அபாயநிலை கட்டிடம் மற்றும் பராமரிப்பு மேலாண்மை திட்டம் (RLBMMP) மற்றும் டொப்ளர் வானிலை ரேடார் நிறுவுதல் திட்டம் ஆகிய மூன்று முக்கிய தேசிய திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு மதிப்பாய்வு செய்யப்பட்டது. இத்திட்டங்கள் தற்போதைய நிலை மற்றும் இலங்கையின் அனர்த்த முன்னறிவிப்பு மற்றும் தயார்நிலையை வலுப்படுத்துவதில் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் அவற்றை செயல்படுத்துவதற்கு சரியான நேரத்தில் வரவுசெலவு திட்ட ஒதுக்கீடுகள் கிடைப்பதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த தேசிய முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாதுகாப்புச் செயலாளர், இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளினால் ஏற்படும் பேரழிவுகளை நிர்வகிப்பதற்கான இலங்கையின் திறனை மேலும் மேம்படுத்த, நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் திறமையான திட்ட செயல்படுத்தலை மேம்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.