54வது பங்களாதேஷ் ஆயுதப்படை தின விழாவில்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார்
நவம்பர் 25, 2025
நேற்று மாலை (நவம்பர் 24) கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற பங்களாதேஷின் 54வது ஆயுதப்படை தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு Andalib Elias, பிரதி அமைச்சரை வரவேற்றார். பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் M. Moniruzzaman, வரவேற்பு உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர், 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் ஆயுதப்படைகளின் வரலாற்று தொடக்கத்தை நினைவுகூர்ந்து, நாட்டை வடிவமைத்த தியாகங்களுக்கும் அதன் விடுதலைப் போரின் நீடித்த மரபிற்கும் அஞ்சலி செலுத்தினார். பகிரப்பட்ட வரலாறு, கலாச்சார உறவு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான நெருங்கிய நட்பை அவர் எடுத்துரைத்தார். தொழில்முறை பரிமாற்றங்கள், பயிற்சிகள் மற்றும் உயர் மட்ட விஜயங்கள் மூலம் பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருவதாகவும், இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், சைபர் பாதிப்புகள், காலநிலை தொடர்பான அனர்த்தங்கள் போன்ற சவால்களை எதிர்கொள்வதில் மேம்பட்ட ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நாடுகடந்த குற்றங்கள் மற்றும் இந்து சமுத்திர மற்றும் வங்காள விரிகுடாவில் இலங்கையின் மூலோபாய பங்கு தொடர்பிலும் வலியுறுத்தினார். பாதுகாப்பிற்கு அப்பால், புடவை, மருந்துகள், கப்பல் கட்டுதல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளில் பொருளாதார ஒத்துழைப்புக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை எடுத்துரைத்தார், மேலும் எதிர்காலத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பிரதி அமைச்சருக்கு உயர் ஸ்தானிகர் ஒரு நினைவுப் சின்னத்தை வழங்கினார்.
இராஜதந்திரிகள், இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், விமானப்படைத் பிரதம அதிகாரி, பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.