பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் காலநிலை தொடர்பான அவசரநிலைமைகளை எதிர்கொள்ள, அனர்த்த மீட்புப் குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன

நவம்பர் 26, 2025

நாட்டின் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, வானிலைத் ஆராய்ச்சி நிலையம் தீவிர வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இன்று (நவம்பர் 26) காலை வெளியிடப்பட்ட வானிலைத் அறிக்கைக்கமைய, தற்போதுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தீவிரமடைய வாய்ப்புள்ளது, இதனால் நாட்டை சுற்றியுள்ள நிலம் மற்றும் கடல் பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கைகள் மற்றும் ஆபத்து எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டின் கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், மேலும் இந்த கனமழை மற்றும் காற்று நிலைமைகள் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது, இதன் காரணமாக காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது, மேலும் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தீவைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடித்தல் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகங்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முப்படைகள், பொலிஸ், அனர்த்த நிவாரண நிலையம் (DMC) மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) உள்ளிட்ட அனைத்து அவசரகால மீட்புப் பிரிவுகளும், பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையின் கீழ் அவசரகால சூழ்நிலைகளைச் சமாளிக்க முழுமையாகத் தயாராக உள்ளன.

முப்படைகளின் அனைத்து அனர்த்த நிவாரணக் குழுக்களும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிவாரணம் வழங்கவும், அவசர காலங்களில் பாதிப்புக்குள்ளானவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும் தயாராக உள்ளன, மேலும் கடற்படை படகுகள், விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உட்பட அனைத்து வளங்களும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளன. மனித உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தேவையான பாதுகாப்பு மற்றும் உதவியை உறுதி செய்ய மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களிலும் இலங்கை பொலிஸ் தயாராக உள்ளது.
 
அனைத்து உள்ளூர் அரசாங்க நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து, அனர்த்த முகாமைத்துவ மையம், பிராந்திய அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் மூலம் ஒரு தேசிய அவசரகால பதிலளிப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது, மேலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து நிலச்சரிவு அபாய பிரதேசங்களை கண்காணிப்பதுடன் தேவையான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புகளையும் வெளியிடும், தேவைப்பட்டால், ஆபத்தில் உள்ள மக்களை அப்பிரதேசங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்.

மேலும், அவசரநிலை ஏற்பட்டால், தேவையான அனர்த்த உதவியைப் பெற 24 மணி நேர இலக்கம் 117 அல்லது +94 112 136 222 மூலம் அவசரகால பதிலளிப்பு பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவிப்புகளுக்கு கவனம் செலுத்தி , விழிப்புடன் இருக்குமாறும் அத்துடன் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தேவையற்ற பயத்தைத் தவிர்ப்பதன் மூலம், சேதங்களை குறைக்கவும், உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கவும் முடியும்.