முப்படைகள் உயர் தயார் நிலையில்: சீரற்ற காலநிலைக்கு மத்தியில் அவசர நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன

நவம்பர் 28, 2025

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏட்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்க, முப்படைகள் முழு மூச்சுடன் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

தேசிய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவசர நிலைமைகளுக்கு பதிலளிக்க முப்படை வீரர்கள் 24 மணி நேரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இலங்கை இராணுவம் நாடளாவ ரீதியில் 20,500 படையினரை இந்நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதுடன், இதன் கீழ் 195 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு இராணுவம் தொடர்ந்து உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது வருகிறது. இதுவரை 5,624 குடும்பங்களை சேர்ந்த மொத்தம் 14,666 நபர்கள் இந்த பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இராணுவ குழுக்கள் உறுதியான அர்ப்பணிப்புடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நடவடிக்கைகளை திறம்பட ஒருங்கிணைப்பதற்கு பிரத்யேக செயல்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைத் தலைமையகங்களுடன் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தாழ்வு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க இராணுவத்தினர் படகுகள், யுனிபபெல் மற்றும் WMZ இராணுவ வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

இலங்கை விமானப்படை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவான மீட்பு நடவடிக்கைகளுக்காக ஆயத்த நிலையில் உள்ளது. ஹெலிகொப்டர்களும் விமானக் குழுக்களும் முக்கிய தளங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 141 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தற்போது 31 விமானப்படைக் குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அனுராதபுரம், பலாலி, பாலாவி, வீரவிலை, இரத்மலானை மற்றும் ஹிங்குரக்கொடை விமான தளங்களில் உடனடி மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மகாதிவுல்வெவ பகுதியில் மீட்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோக பணிகளில் விமானப்படை குழுக்கள் ஈடுபட்டுள்ளன. மேலும், தியத்தலாவை பகுதியில் உள்ள குழுக்கள் அங்கு பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பு மையங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படை நவம்பர் 22 ஆம் திகதி முதல் முழுத் திறனுடன் செயல்பட்டு வருகிறது. தெற்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய அனர்த்த நிவாரண சேவைகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம், கடற்படை குழுக்கள் அதிகரித்து வரும் வெல்ல ஆபத்தில் இருந்த 911 பேரை மீட்டுள்ளன. பாடசாலை மாணவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடற்படை குழுக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் (DMC) நெருக்கமான ஒருங்கிணைப்பில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பலத்த காற்றால் விழுந்த மரங்களை அகற்றுதல், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு சிறிய படகுகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளை மேட்கொண்டு வருகின்றன. மேலும், அனைத்து கடற்படை கட்டளைகளிலும் மேலதிக நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.