முப்படைகள் அனர்த்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து
மேற்கொண்டு வருகின்றன

டிசம்பர் 01, 2025

மோசமான வானிலை காரணமாக அதிகரித்து வரும் நீர் மட்டத்தால் உருவான வெள்ள நிலைமைகள் ஆயிரக்கணக்கான குடும்பங்களை பாதித்துள்ளன. இந்நிலையில், இலங்கை முப்படைகள் நாடு முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில், பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து தரை, நீர் மற்றும் வான்வழி உதவிகளை விரிவுபடுத்தியுள்ளன.

தேடல், மீட்பு மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் பல்வேறு நிவாரணக் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளது. தடைப்பட்ட பாதைகளை சுத்தப்படுத்தல், குளக் கட்டுகளை வலுப்படுத்தல் மற்றும் ஆபத்திலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல் ஆகிய பணிகளும் அவற்றில் அடங்கும். பொலன்னறுவை, வன்னி, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள இராணுவத்தினர் திடீர் வெள்ளத்தில் சிக்கிய பல பொதுமக்களை மீட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் அவசர தற்காலிக தங்குமிடங்களில் தொடர்ந்தும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

கிழக்கு, வடமத்திய, வடக்கு, மேற்கு மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் இலங்கை கடற்படை நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில், கடற்படை குழுக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியதுடன், நிவாரணப் பொருட்கள் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிப்பதற்கும் உதவியளித்துள்ளன. அவசரகால மீட்புப் பணிகள் ஆரம்பித்ததிலிருந்து 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி வழங்கியுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களைப் பயன்படுத்தி வான்வழி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மஹாவையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி அமைத்தது. மேலும், அனர்த்த மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியாவிலிருந்து வந்த நிவாரணப் பொருட்கள் மற்றும் சிறப்பு மீட்பு குழுவினரின் வருகைக்கும் லாஜிஸ்டிக் உதவிகளை வழங்கியுள்ளது.

பாதகமான வானிலை தொடரும் நிலையில், உயிர்களைப் பாதுகாக்கவும், தடையற்ற மனிதாபிமான உதவிகளை வழங்கவும் முப்படைகள் முழுமையாக அணிவகுத்துள்ளன. அவர்கள் அனர்த்த முகாமைத்துவ அமைப்புகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.