அனர்த்த நிவாரண நடவடிக்கைக்காக இரண்டு அமெரிக்க
C-130 விமானங்கள் வந்தடைந்தன

டிசம்பர் 07, 2025

இலங்கையில் மேட்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்களைக் கொண்ட சிறப்பு குழு அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130 Hercules போக்குவரத்து விமானங்களில் இன்று (டிசம்பர் 07) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்தடைந்தது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் , கௌரவ ஜூலி சுங், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கௌரவ பேராசிரியர் கிருஷாந்த அபேசேன, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க குழுவினரை வரவேற்க சமூகமளித்திருந்தனர். 

தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட அமெரிக்க குழு, இலங்கை முப்படைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் (DMC) நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்பட்டு, அனர்த்த நிவாரண பணிகளை தொடர்ந்து விரைவுபடுத்தவும், உள்கட்டமைப்பு மதிப்பீட்டிற்கான சிறப்பு உதவிகளை வழங்கவும், தேசிய மீட்பு முயற்சிகளை வலுப்படுத்தவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிவாரண உதவியளிப்பதில் அமெரிக்க அரசாங்கத்தின் விரைவான செயற்பாட்டிற்கு நன்றி தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), "மேம்பட்ட தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உபகரணங்களின் இந்த பயன்பாடு, நட்பு மற்றும் கூட்டாண்மையின் ஆழமான வெளிப்பாடாகும், இது பாதிக்கப்பட்ட சமூகங்களைச் மீட்டெடுக்கும் நமது தேசிய திறனை கணிசமாக மேம்படுத்துகிறது" என்று கூறினார்.' 

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்' திட்டத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட பரந்த அமெரிக்க அரசாங்க உதவித் தொகுப்பின் ஒரு முக்கிய அங்கமாக C-130 விமானத்தின் பயன்பாடு உள்ளது. 

அமெரிக்க தூதரகம், வெளியுறவு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.