‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ் அனர்த்தத்திற்கு பிந்தைய மீட்பு நடவடிக்கைகளை முப்படையினர் தீவிரப்படுத்துகின்றனர்
டிசம்பர் 08, 2025இலங்கை முப்படையினர், அனர்த்தத்திற்கு பிந்தைய நிவாரணப் பணிகளில் தொடர்ந்தும் முன்னணிப் பங்காற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சமூகங்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், முக்கிய மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு மூலோபாய ரீதியான ஆதரவளிப்பதற்கும் முப்படைகளும் விரைவாகச் செயல்பட்டன. அத்துடன் அனர்த்தத்திற்கு பிந்தைய மீட்பு நடவடிக்கைகளுக்கு திறமையான மற்றும் ஒருங்கிணைந்த சேவையை உறுதி செய்வதற்காக ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ் அவர்கள் பெரும் பணியாற்றி வருகின்றனர்.
"தித்வா" சூறாவளி பல மாகாணங்களில் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏட்படுத்தியது. முப்படைகளின் பொறியியல் பிரிவுகள் நிலச்சரிவுகளை அகற்றுதல், பாதைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் அரசாங்க பொறிமுறையுடன் இணைந்து சேதமடைந்த பொது வசதிகளை சரிசெய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்களை நிர்வகித்தல், உணவு, குடி நீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குதல், நடமாடும் சமையலறைகளை நிர்வகித்தல், இடம்பெயர்ந்த நபர்களுக்கு சரியான நேரத்தில் உணவு சென்றடைவதை உறுதி செய்தல். வீடுகள் மற்றும் பொது கட்டமைப்புகளில் சேறு மற்றும் குப்பைகளை அகற்றுதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுதல் மற்றும் உதவி விநியோகத்திற்கான ஆதரவை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் முப்படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு இடையேயான தடையற்ற ஒருங்கிணைப்புடன் , பிற அமைப்புகளுடன் சேர்ந்து, அனர்த்தத்திற்கு பிந்தைய நிவாரண நடவடிக்கைகளுக்கு முக்கிய உதவியளித்து வருகின்றன. இது, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான நாட்டின் பாதுகாப்பு படைகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நிரூபணப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.