இலங்கையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்த சீனா மனிதாபிமான உதவிகளை வழங்கியது
டிசம்பர் 08, 2025அனர்த்தத்திற்கு பிந்திய நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் அன்பளிப்பு செய்த ஒரு தொகை மனிதாபிமான உதவிப் பொருற்கள் இன்று (டிசம்பர் 08) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கான சீன தூதுவர் அதிமேதகு Qi Zhenhong, விமான நிலையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது இந்த உதவிப் பொருளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்நிகழிவில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (AASL) நிறுவனத்தில் தலைவர் எயார் சீஃப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம (ஓய்வு), மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பாணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சம்பத் கொட்டுவேகொட ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய சீன தூதுவர், இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால நட்பை நினைவுபடுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை எடுத்துக்காட்டினார். அத்துடன் தேசிய தேவைகளின் போது இலங்கைக்கு உதவுவதில் சீனாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரையாற்றுகையில், மிக தேவையான நேரத்தில் சீனா அளித்த மனிதாபிமான உதவிக்கு ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்ததுடன் சீனாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த ஆதரவு தேசிய அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு முக்கிய பங்களிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
சீன தூதரகம், பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு, DMC, இராணுவம், விமானப்படை, இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம், மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.