அனர்த்த நிவாரணம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் கலந்துரையாடினார்

டிசம்பர் 08, 2025

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு திறன் மேம்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும் வகையில், இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கீத் மைல்ஸ் இன்று (டிசம்பர் 08) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின் போது, அனர்த்தத்திற்கு பிந்திய தற்போதைய மனிதாபிமான நிலைமை குறித்தும் தேசிய அனர்த்த மீட்பு வழிமுறைகள் மற்றும் இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் பிற அரச நிறுவனங்களின் தலைமையிலான தொடர்ச்சியான அனர்த்த நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்பிலும் பிரதி அமைச்சர் கேர்ணல் மைல்ஸுக்கு விளக்கமளித்தார். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்குவதை உறுதி செய்வதற்கு பயனுள்ள ஒருங்கிணைப்புக்கான அவசரத் தேவையையும் அவர் எடுத்துரைத்தார்.
 
இந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஐக்கிய இராச்சியத்தின் உறுதிப்பாட்டை கேர்ணல் மைல்ஸ் மீண்டும் உறுதிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும், நடைபெற்று வரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பங்களிப்பதற்கும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைத் தணிப்பதற்கும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கான தமது நாட்டின் நோக்கத்தையும் அவர் தெரிவித்தார்.
 
அனர்த்த தயார்நிலை, பதில் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்பு வழிகள் தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டது. எதிர் வரும் மாதங்களில் மீள்தன்மையை மேம்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் முக்கிய தேவைகள் குறித்து கேர்ணல் மைல்ஸ் மேலதிக தகவல்களையும் கோரினார்.
 
கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த பாதுகாப்பு உறவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்பு தொழில்முறை மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இலங்கை முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மேம்பட்ட இராணுவப் பயிற்சித் திட்டங்களை வழங்குவதற்கான ஐக்கிய இராச்சியத்தின் திட்டங்களை கேர்ணல் மைல்ஸ் இதன் போது பகிர்ந்து கொண்டார்.