வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்காக
உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது - HL-FRAC
டிசம்பர் 09, 2025
சமீபத்திய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வெளிநாட்டு நிவாரண உதவிகளைப் பெறல், ஒருங்கிணைத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றுக்கான தேசிய அமைப்பை வலுப்படுத்துவதற்காக, கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் (DMC) புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு (HL-FRAC) டிசம்பர் 08 அன்று கூடியது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான இக் குழு, பெறப்பட்ட அனைத்து வகையான வெளிநாட்டு உதவிகளும் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு அவதானம் அதிகமுள்ள குழுக்களை தாமதமின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஒரு திறமையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுள்ள கட்டமைப்பை நிறுவுவதில் கவனம் செலுத்தியது.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதுடன், மேம்படுத்தப்பட்ட விநியோக பொறிமுறையை ஆதரிப்பதற்குத் தேவையான செயல்பாட்டு மற்றும் போக்குவரத்து தேவைகள் குறித்த பெறுமதியான வழிகாட்டுதாள்களை வழங்கினார். பாதுகாப்புத் துறையின் திறன்களை ஒருங்கிணைப்பது தரைமட்ட ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் மற்றும் நிவாரண செயல்முறை முழுவதும் மேற்பார்வையை வலுப்படுத்தும் என்றும் அக் குழு வலியுறுத்தியது.
கலந்துரையாடலின் போது, வெளிநாட்டு ஆதரவை நிர்வகிக்க ஒரு மையப்படுத்தப்பட்ட பொறிமுறையை நிறுவுவதன் அவசியத்தை உறுப்பினர்கள் வலியுறுத்தினார். இதில், பாதிப்புகளின் தீவிரத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பகுதிகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலைத் தயாரிப்பதும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குள் குறிப்பிட்ட தேவைகளை அடையாளம் கண்டு, குறித்த பகுதிகளுக்கு உதவியை உறுதி செய்வதும் அடங்கும்.
மேலும் நிவாரணப் பொருட்களின் பெற்றுக் கொள்ளல் முதல் அதன் இறுதி விநியோகம் வரை அவற்றின் நகர்வைக் கண்காணிக்க ஒரு விரிவான பொருள் முகாமைத்துவ மற்றும் கண்காணிப்பு அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்நேர அறிக்கையிடல் அமைப்பு வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தவும், துல்லியமான ஆவணங்களை உறுதிப்படுத்தவும், நிவாரண நடவடிக்கைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை வளர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்புக் கூறல், தெளிவு மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்தல் ஆகியவை தேசிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும், உதவி விநியோக செயல்முறையின் ஒருமைப்பாட்டை பேணுவதற்கும் அவசியம் என்பதை குழு மீண்டும் உறுதிப்படுத்தியது.
ஜனாதிபதி செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை தளபதிகள், DMC யின் மேலதிக செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.