சூறாவளியினால் சேதப்பட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளை பழுதுபார்க்க
இலங்கை இராணுவத்தின் உதவி
டிசம்பர் 10, 2025
அண்மையில் இலங்கையை தாக்கிய சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளை அவசரமாக பழுபார்க்க இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது சியம்பலாகஸ்வெவ குளத்தில் பழுதுபார்க்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். குளத்தின் கட்டமைப்பை உறுதிப்படுத்தவும் சுற்றியுள்ள மக்களுக்கு தடையின்றி நீர் விநியோகத்தை உறுதி செய்யவும் அவசர மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், பிராந்தியத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு முக்கியமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய எலஹெர கால்வாயின் அணைக்கட்டைச் சரிசெய்வதில் நீர்ப்பாசனத் துறை மற்றும் மகாவலி அதிகாரசபைக்கு இராணுவத்தினர் உதவியளித்தனர். எதிர்வரும் பருவமழை காலத்திற்கு முன்னதாக, பழுதுபார்ப்புகளை விரைவுபடுத்தவும் அணைக்கட்டைப் பலப்படுத்தவும் அவர்களின் ஆதரவு பெரிதும் உதவும்.
அத்துடன் மகாலிந்தவெவ குளக்கட்டு பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளும் மேட்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஏட்படக்கூடிய உடைப்புகளைத் தடுக்க அணையின் சேதமடைந்த பகுதிகளை வலுப்படுத்த இராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் கனமழை காரணமாக நிரம்பி வழியும் யோதவெவவின் கட்டமைப்பு குறைபாடுகளும் பழுபார்க்கப்பட்டு வருகின்றது.
இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் சூறாவளிக்குப் பிறகு அணிதிரட்டப்பட்ட நாடு தழுவிய அனர்த்த நிவாரண நடவடிக்கையின் ஒரு அங்கமாக நடைபெற்று வருகின்றன. முக்கியமான நீர்ப்பாசன பழுதுபார்ப்பு பணிகளில் தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அத்தியாவசிய நீர் பாசன உள்கட்டமைப்புகளை பாதுகாப்பதிலும் பிரதேச சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இலங்கை இராணுவம் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.