மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்து அமெரிக்க மற்றும் இந்திய விமானப்படை
விமானங்கள் இலங்கையை விட்டு வெளியேறின

டிசம்பர் 15, 2025

Ditwah சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தன. அனர்த்த நிவாரணப் பணிகளை ஆதரிப்பதற்காக, டிசம்பர் 7 முதல் 13 வரையான காலத்திற்குள் இரண்டு அமெரிக்க விமானப்படை C-130J விமானங்கள் 60 Marines படையினருடன் இலங்கைக்கு வந்தடைந்தன.
 
இந்த சரக்கு விமானங்கள், கட்டுநாயக்க மற்றும் ரத்மலானை விமானப்படை தளங்களிலிருந்து யாழ்ப்பாணம், அனுராதபுரம், திருகோணமலை மற்றும் அம்பாறையில் உள்ள விமானப்படை முகாம்களுக்கு அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை மேட்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிறப்பு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டன. இதில் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டு, ஒரு விமானம், நேற்று (டிசம்பர் 14) நிவாரணக் குழுவின் ஒரு பகுதியினருடன் நாடு திரும்பியது.
 
சூறாவளி இலங்கையைத் தாக்கிய தருணத்திலிருந்து, இந்திய அரசு உடனடியாக அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்க இரண்டு இந்திய விமானப்படை (IAF) Mi-17 ஹெலிகொப்டர்களை இலங்கைக்கு அனுப்பியது. இந்த ஹெலிகொப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள், அதிக ஆபத்துள்ள மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுதல், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லல் உள்ளிட்ட பல்வேறு வகையான மனிதாபிமான பணிகளை மேற்கொண்டதன பின் நாட்டைவிட்டு வெளியேறின .
 
அதனைத் தொடர்ந்து இந்த பணிகள் தொடர்வதை உறுதி செய்வதற்காக டிசம்பர் 8 ஆம் திகதி மற்றொரு IAF Mi-17 ஹெலிகொப்டர் இலங்கைக்கு வந்தது. நிவாரண நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, இந்த விமானமும் நேற்று (டிசம்பர் 14) இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றது.
 
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது நட்பு நாடுகள் வழங்கிய இந்த விமான நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தன. அனர்த்த நிவாரணப் நடவடிக்கைகளின் போது அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் சிறந்த சேவைக்காக அமெரிக்கா மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சு அதன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
 
அமெரிக்க மற்றும் இந்திய விமானப்படை விமானங்கள் விடைபெற்றுச் செல்லும் நிகழ்வில் இலங்கை விமானப்படையின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித்த சுமனவீர உட்பட சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.