இலங்கையில் மனிதாபிமான பணிக்காக இந்திய இராணுவத்தின் 60 வது கள மருத்துவமனைக்கு பாராட்டு
டிசம்பர் 15, 2025பேரழிவை ஏற்படுத்திய தித்வா சூறாவளியை அடுத்து இந்திய இராணுவத்தின் 60 கள மருத்துவமனை வழங்கிய அனரத்த நிவாரண மருத்துவ உதவி, அதன் விதிவிலக்கான மனிதாபிமான தாக்கம் மற்றும் தொழில்முறை சிறப்பை அங்கீகரிக்கும் விதமாக 2025 டிசம்பர் 14 அன்று பனாகொடையில் உள்ள இராணுவ முகாமில் பாராட்டு வழங்கப்பட்டது.
இலங்கையின் ஊவா மாகாணத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மஹியங்கனை பகுதிக்கு லெப்டினன் கேணல் ஜக்னீத் கில் தலைமையிலான இந்திய இராணுவ மருத்துவ சேவைகளைச் சேர்ந்த 85 பேர் கொண்ட மருத்துவக் குழு 2025 டிசம்பர் 02 முதல் டிசம்பர் 12 வரை அனுப்பப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில், இயற்கை அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட 7,000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு விரிவான மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் பல் மருத்துவப் பராமரிப்புகளை இந்தக் குழு வழங்கியது.
சவாலான கள நிலைமைகளின் கீழ் செயல்பட்ட மருத்துவ பணியாளர்கள், சிறந்த மருத்துவ நிபுணத்துவம், செயல்பாட்டுத் திறன் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அவர்களின் விரைவான செயற்பாடும் நீடித்த மருத்துவ ஆதரவும், சூறாவளிக்குப் பிறகு காயங்கள், பொது சுகாதார அபாயங்கள் மற்றும் அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகலுடன் போராடும் சமூகங்களுக்கு முக்கியமான நிவாரணத்தைக் வழங்கியது.
அவர்களின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, இலங்கை இராணுவத்தின் சார்பாக இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களால் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களால் வழங்கப்பட்ட பாராட்டு கடிதத்தையும், இந்திய இராணுவ மருத்துவ சேவைகளின் மருத்துவக் குழுவிற்கு பாராட்டுச் சின்னத்தையும் வழங்கியதுடன் சின்னங்கள் பரிமாரி கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் ஒத்துழைப்பு பிணைப்புகளை எடுத்துக்காட்டுவதுடன் இரு படைகளுக்கும் அவர்களின் தளபதிகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது. எதிர்காலத்தில் இராணுவ-இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த முகாமைத்துவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.
நன்றி - www.army.lk