பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்து அனர்த்த நிவார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்
டிசம்பர் 16, 2025இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Rémi Lambert நேற்று (டிசம்பர் 15) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, நாட்டின் பல பகுதிகளை பாதித்த சமீபத்திய இயற்கை அனர்த்தம் மற்றும் அவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மீட்பு, நிவாரண மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மீட்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் தூதுவருக்கு விளக்கமளித்ததுடன், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஆயுதப்படைகள் மற்றும் தொடர்புடைய சிவில் நிறுவனங்கள் வகிக்கும் முக்கிய பங்கையும் எடுத்துக்காட்டினார்.
அனர்த்தங்களுக்கு முன்னெச்சரிக்கை, தடுப்பு, அபாய முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி ஆகிய துறைகளில் தேசிய திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். அதேபோல், குடியேற்றத் திட்டமிடல், நீர் பாசன மற்றும், வீதி மற்றும் ரயில்வே உட்கட்டமைப்பு மறுசீரமைப்பு உள்ளிட்ட அனர்த்தத்திற்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இதனுடன், சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் தொடர்ச்சியும் நிலைத்தன்மையும் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முக்கிய காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் பிரான்ஸ் தனது உறுதியான அர்ப்பணிப்பை தொடர்வதாக பிரான்ஸ் தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். உடனடி மனிதாபிமான உதவியாக, மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக 1,000 அவசர நிவாரணப் பொதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அனர்த்த முகாமைத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற பிரான்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர் இலங்கைக்கு வருகை தந்து, நிலைமைகளை மதிப்பீடு செய்யவும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடவும் சில நாட்கள் தங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் வானிலைத் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட முக்கிய தேசிய நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கு உதவ முனைவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
சமீபத்திய அனர்த்தத்திலிருந்து பெறப்பட்ட பாடங்களை, குறிப்பாக மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பாக, பயன்படுத்திக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை இருதரப்பும் வலியுறுத்தின. மூலோபாய மற்றும் செயற்பாட்டு மட்டங்களில் அனர்த்தப் பதிலடி நடவடிக்கைகளில் காணப்படும் சவால்களுக்கு முகங்கொடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், தயார்நிலையும் பதிலளிப்பு முறைமைகளையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர் கருத்தரங்குகள் நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இந்த சந்திப்பில் பிரான்ஸ் பாதுகாப்பு ஆலோசகர், பிராந்திய சிவில் பாதுகாப்பு இணைப்பாளர் உள்ளிட்ட பிரான்ஸ் தூதரகத்தின் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.