தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கம்
தொடர்பான கூட்டம் நடைபெற்றது
டிசம்பர் 17, 2025
தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கொள்கையை உருவாக்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம், நேற்று (டிசம்பர் 16) பாதுகாப்பு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார். மேலும், வரைவான வர்த்தமானி அறிவிப்பின் தொடர்ச்சியான மதிப்பாய்வு மற்றும் மறுமதிப்பீடு, தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை கட்டமைப்புடன் அதன் இணக்கத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த மற்றும் எதிர்கால நோக்குடைய உத்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தேசிய பாதுகாப்பு நோக்கங்களை முன்னேற்றுவதில் அதன் முக்கிய பங்கைச் சுட்டிக்காட்டினார்.
தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையை உருவாக்குவது என்பது தேசிய பாதுகாப்பிற்காக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கிய மூலோபாயத் தேவையாகும். நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் திறன்கள் மேம்படுத்தி, அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். சமீபத்திய அனர்த்தங்களிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள், முப்படைகளின் திறன்களை திறம்பட ஒருங்கிணைப்பது மற்றும் இந்த பலங்களை தேசிய பாதுகாப்புக் கொள்கை கட்டமைப்பில் இணைக்க ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட செயல்முறையின் அவசியம் குறித்தும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, ஒருங்கிணைந்த பங்குதாரர் ஆலோசனைகள் மற்றும் ஆதார அடிப்படையிலான முடிவெடுப்பதின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், தேசிய பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (CDRD) தலைவர், வரைவுக் கொள்கையின் நோக்கங்கள் மற்றும் அவை மூலோபாய செயல்பாட்டு தயார்நிலைக்கும் புதுமைக்கும் எவ்வாறு பொருத்தமானவை என்பதை பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார்.
கூட்டத்தின் முடிவில், அனைத்து கொள்கை நோக்கங்களும் மேலோங்கி நிற்கும் தேசிய கொள்கையுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்ததுடன், பெறப்பட்ட கருத்துக்களை இணைத்து, வரைவுக் கொள்கையை மேலதிக மதிப்பாய்விற்காக முன்னெடுக்குமாறு தொடர்புடைய குழுக்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள், குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.