எகிப்திய தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
டிசம்பர் 24, 2025இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதர், மேதகு Adel Ibrahim அவர்கள், நேற்று (டிசம்பர் 23) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சுமூகமான சந்திப்பின் போது, இலங்கை மற்றும் எகிப்து இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் வகையில், பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன் போது, மேதகு ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்களின் சார்பாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர், இலங்கைக்கு எகிப்து அரசும் மக்களும் தொடர்ந்து வழங்கி வரும் உறுதியான ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
அண்மையில் ஏட்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து, நாட்டில் மீள்கட்டியெழுப்பும் பணிகளில் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், அனைத்து துறைகளிலும் இயல்புநிலையை மீட்டெடுக்க அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
நிபுணத்துவ பரிமாற்றம், திறன் மேம்பாடு, உயர் மட்ட தூதுக்குழு வருகைகள் மற்றும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால பயிற்சி வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம், இருதரப்பு பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான உறுதியான விருப்பத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்தினர்.
இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட தேசிய நெருக்கடியை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முன்மாதிரியாக கையாண்ட இலங்கையின் அணுகுமுறையை எகிப்த்திய தூதுவர் பாராட்டினார். இலங்கை மக்களின் தேசிய ஒற்றுமையும் மீள்தன்மையும் சர்வதேச சமூகத்திற்கு உரிய முறையில் எடுத்துரைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை-எகிப்து இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவு, எதிர்கால கூட்டாண்மைக்கான உறுதியான அடித்தளமாக அமையும் என்றும், அரசாங்க மட்டத்தில் ஒத்துழைப்பையும் நல்லெண்ணத்தையும் மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.