குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்து சட்டம், 05 05 2025 தொடர்பான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது
ஜனவரி 06, 2026குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் முகங்கொடுக்கக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் பாதுகாப்பு மற்றும் சட்டத் துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏட்படுத்தும் நோக்கில், குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்து, இல 05 , 2025 சட்டம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜனவரி 6) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தகவல் வெளிப்படுத்தல் தொடர்பான சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் அவற்றை மீறினால் ஏற்படும் விளைவுகள் குறித்த முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டிருந்தது. ஒழுங்கமைக்கப்பட்ட நிதி குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியில் இவை முக்கியத் தூண்களாகக் கருதப்படுகின்றன.
நிகழ்வின் போது , Additional Solicitor General மற்றும் இலங்கை விமானப்படை Judge Advocate எயார் கொமடோர் சுதர்ஷன டி சில்வா, PC உரையாற்றினார். முப்படை சிரேஷ்ட அதிகாரிகள், சட்டத் துறை மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு மத்தியில் உரையாற்றிய அவர், 2025 ஜூன் 01 திகதி முதல் அமுலில் உள்ள புதிய சட்டத்தின் விரிவான பகுப்பாய்வை வழங்கினார்.
அத்துடன் இது தொடர்பில் தகவல் வெளிப்படுத்தல் தொடர்பான சட்டத் தேவைகள் குறித்தும் அவர் வலியுறுத்தினார். குற்றச் செயல்களினால் ஈட்டப்பட்டவை என சந்தேகிக்கப்படும் சொத்துகள் குறித்த தகவல் எவரிடமேனும் இருந்தால், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவிக்க வேண்டும் என்பது சட்டத்தின் கட்டாயமாகும் என அவர் விளக்கினார். மேலும், இவ்வாறான தகவல்களை தெரிந்தும் தெரியாதது போல் நடந்துக்கொள்வது (“willful blindness”) அல்லது வெளிப்படுத்தத் தவறுவது, இச்சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகக் கருதப்படுவதுடன், கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சி, முப்படை மற்றும் அரச நிர்வாக துரையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இச் சட்டம் தொடர்பான முழுமையான அறிவு வழங்கப்பட வேண்டும் என்ற பாதுகாப்பு அமைச்சின் உறுதிப்பாட்டை வலியுறுத்துவதாக அமைந்தது. உயர் தரமான சட்ட அறிவை மேம்படுத்துவதன் மூலம், வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்து, சட்டவிரோத நிதி வலையமைப்புகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதே இவ் அமைச்சின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி முடிவில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளில் உயர்ந்த நேர்மை மற்றும் ஒழுக்க தரங்களைப் பேணுவதற்காக, சட்டத்தின் நடைமுறை பயன்பாடு குறித்து அதிகாரிகள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், மேலதிக செயலாளர் (நிர்வாகம்), சிரேஷ்ட முப்படை , சட்டத் துறை மற்றும் அரச நிர்வாக துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.