இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

ஜனவரி 07, 2026

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி Upendra Dwivedi, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜனவரி 7) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி நேற்று இலங்கைக்கு வந்தடைந்தார். 

ஜெனரல் திவ்வெதியை பாதுகாப்புச் செயலாளர் அன்புடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் நல்லுறவு மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடளில் ஈடுபட்டனர். சமீபத்திய அனர்த்தத்தின் போது இந்திய ஆயுதப்படைகள் வழங்கிய உதவிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த உதவி இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது என்று குறிப்பிட்டார்.

இந்தியாவினால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதில் இலங்கையின் ஆர்வத்தையும் அவர் வெளியிட்டார்.

இலங்கையுடன் நெருக்கமான மற்றும் நீடித்த பாதுகாப்பு உறவுகளைப் பேணுவதில் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை ஜெனரல் Dwivedi மீண்டும் உறுதிப்படுத்தினார். இலங்கை இராணுவத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், நீடித்த ஈடுபாடு, விரிவாக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இரு நாட்டு இராணுவங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் அதை மேலும் வலுப்படுத்தவும் ஆவலுடன் இருப்பதாக அவர் கூறினார். 

பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.