இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரைச் சந்தித்தார்

ஜனவரி 07, 2026

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி (Upendra Dwivedi), பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (ஜனவரி 7) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி நேற்று இலங்கை வந்தார். ஜெனரல் திவ்வெதியைபிரதி அமைச்சர், அன்புடன் வரவேற்றதுடன் சிநேகபூர்வ கலந்துரையாடளில் ஈடுபட்டார். இதன் போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை இரு தரப்பினரும் நினைவுபடுத்தினர்.

அண்மையில் டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இந்திய அரசு அளித்த கணிசமான மற்றும் பன்முக ஆதரவிற்காக இலங்கை ஜனாதிபதி மற்றும் மக்களின் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

அனர்த்த நிவாரணக் குழுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட இந்தியாவின் உரிய நேரத்தினாலான ஆதரவு நாட்டின் மீட்பு மற்றும் நிவாரணம் முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த குழுக்கள் தொடர்ந்தும் நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றன. கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் மற்றும் பிற நாடுகடந்த குற்றங்களை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்த வழிவகுத்த இந்திய பாதுகாப்புப் படைகளுடனான செயல்பாட்டு ஒத்துழைப்புக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். 

மேம்பட்ட தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் பகிர்வு முயற்சிகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.  

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தை எதிர்கொள்வதில் இலங்கை அரசாங்கமும் மக்களும் காட்டிய வலுவான தேசிய ஒற்றுமை மற்றும் மீள்தன்மையைப் ஜெனரல் திவ்வெதி பாராட்டினார்.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை துறைகளில் இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை ஜெனரல் திவ்வெதி மீண்டும் உறுதிப்படுத்தினார். 

மனிதாபிமான உதவி, அனர்த்த மீட்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முயற்சிகளில் தொடர்ந்து ஆதரவை வழங்குவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மை, மீள்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் தயார்நிலையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உருவாக்க இளைய, நடுத்தர மற்றும் சிரேஷ்ட தலைமைத்துவங்கள் மூலம் அனைத்து மட்டங்களிலும் மக்களுக்கிடையிலான பிணைப்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். 

மேலும், அவசர சூழ்நிலைகளின் போது பொதுவான புரிதலை வளர்ப்பதற்காக, தேசிய அளவில் இருந்து தந்திரோபாய நிலை வரை அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை மேம்படுத்த கூட்டு பயிற்சி மற்றும் பரிமாற்ற திட்டங்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் கூட்டாண்மையை உறுதிப்படுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

இந்திய இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கொழும்பிலுள்ள பாதுகாப்பு ஆலோசகர் உட்பட இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.