13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2024/2025 நிறைவு பெற்றது

ஜனவரி 13, 2026

13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2024/2025 நேற்று (ஜனவரி 12) பனாகொடை இராணுவ முகாமில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), பாதுகாப்புக் கடமைகளில் மட்டுமன்றி விளையாட்டு துறையிலும் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கும் நீடித்த அமைதி மற்றும் தேசிய ஒற்றுமையை உறுதி செய்ய அவர்களின் தியாகங்களுக்காக அஞ்சலி செலுத்தினார். மேலும் இலங்கையின் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாதனைகளுக்கு முப்படை வீரர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துரைத்தார், பிராந்திய மற்றும் சர்வதேச போட்டிகளில் நாட்டின் பதக்கம் வென்றவர்களில் பெரும் பகுதியினர் ஆயுதப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

கட்டமைக்கப்பட்ட பயிற்சி மற்றும் நிலையான ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதியமைச்சர், 2028 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது ஒரு கூட்டு இலக்காக இருக்க வேண்டும் என்றும், இராணுவ விளையாட்டு வீரர்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் கூறினார்.

13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் முதலிடத்தை இலங்கை இராணுவம் பெற்றுக்கொண்டதுடன் இலங்கை விமானப்படை இரண்டாம் இடத்தைப் பெற்றது.

இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிறைவு விழாவில், 39 விளையாட்டு நிகழ்வுகளில் 4,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபற்றிய விளையாட்டுப் போட்டிகள் முழுவதும் சிறப்பான திறமை, ஒழுக்கம் மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகள் கௌரவிக்கப்பட்டன.
 
வண்ணமயமான நிறைவு விழாவில் முப்படை தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுக் கொடி இராணுவத் தளபதியினால் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து கடற்படைத் தளபதியிடம் கையளிக்கப்பட்டது. இது 2026/2027 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் இலங்கை கடற்படையினால் ஏட்பாடு செய்யப்படும் என்பதை அடையாளப்படுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து 13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.