‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஜனவரி 21, 2026

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பங்கேற்புடன், 2026 ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவில் நடைபெற்ற ‘EX – DOSTI - XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படை உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை வளர்த்து நட்பை மேலும் வலுப்படுத்துதல், பரஸ்பர செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இயங்குநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ‘EX – DOSTI – XVII ’ இந்த முத்தரப்பு கடற்படைப் பயிற்சி 2026 ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவின் மாலேவில் மற்றும் மாலைத்தீவின் கடற்கரையை மையமாகக் கொணடு நடைபெற்றதுடன், இலங்கை கடற்படை கப்பல் சுரனிமல, இலங்கை கடலோர காவல்படைத் துறையின் குழுவுடன் இணைந்து இந்தப் பயிற்சியில் பங்கேற்றது.

மேலும், இந்திய கடலோர காவல்படைத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய கடலோர காவல்படை கப்பல்களான ‘Varaha’, ‘Atulya’ மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் மாலைத்தீவு கடலோர காவல்படை கப்பல்களான ‘Huravee’ மற்றும் ‘Ghazee’ ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்றதுடன், இந்தப் பயிற்சியின் துறைமுக கட்டம் மாலேயில் உள்ள வணிகத் துறைமுக வளாகத்திலும், ஃபனாதூ (Funadhoo) தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் நிலப் பகுதிகளிலும் நடைபெற்று, இந்தப் பயிற்சியின் போது, பங்கேற்பாளர்கள் எண்ணெய் கசிவு மேலாண்மையில் ஈடுபட்டு, கப்பல் ரோந்துப் பணிகளில் பங்கேற்று, ஏறுதல், ஆய்வு மற்றும் பறிமுதல் நடைமுறைகளின் தத்துவார்த்த அம்சங்களைப் பற்றி விவாதித்தனர், மேலும் கடல்சார் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களை சோதித்தனர்.

அதன்படி, இந்த முத்தரப்பு கடற்படைப் பயிற்சியின் போது, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வெளியேற்றுதல் (Medical Evacuation), படகுகளுக்கான அணுகல், தேடுதல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு பயிற்சிகள் (Visit Board Search & Seizure & Piracy), தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகள் (Search and Rescue Drill) மற்றும் போர்க்கப்பல்களுக்கு இடையே வணக்கம் செலுத்துதல் உட்பட (Steam Past) பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பயிற்சியில் இலங்கை கடலோரக் காவல்படையின் இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப், இலங்கை கடலோரக் காவல்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் மற்றும் சுரனிமில கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் சேனக வாஹல ஆகியோரும் பயிற்சியுடன் இணைந்து நடைபெற்ற இருதரப்பு சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.

மேலும், பிராந்திய கடல்சார் தரப்பினரின் பங்கேற்புடன் இதுபோன்ற பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம் மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் புதிய அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை ஆகியவை எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு கூட்டாக பதிலளிக்கவும் தீர்வுகளைக் கண்டறியவும் முடியும்.

நன்றி - www.navy.lk