நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்து
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தினார்

ஜனவரி 27, 2026

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் மேதகு Wiebe de Boer, நேற்று (ஜனவரி 26) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த நல்லுறவு சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் தொடர்பான விடயங்ககள் மற்றும் இலங்கைக்கும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது. இலங்கையின் சமீபத்திய அனர்த்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒருங்கிணைந்து நெதர்லாந்து இராச்சியம் வழங்கிய உறுதியான ஆதரவிற்கு ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்களின் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் கிராமப்புற இணைப்பு, வாழ்வாதாரம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முதன்மையான தேசிய முயற்சியான 'கிராமப்புற பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் திட்டத்திற்கு' நெதர்லாந்து வழங்கிய பெறுமதியான  உதவிக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். 

சமீபத்திய அனர்த்தத்தின் பிந்தைய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நெதர்லாந்து தூதுவர் பாராட்டினார். இலங்கையின் முக்கிய வளர்ச்சி முன்னுரிமைகளுடன் இணைந்து, குறிப்பாக அனர்த்த அபாயக் குறைப்பில் நிபுணத்துவம் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் நெதர்லாந்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். 

நெருக்கமான நட்புறவை பேணுவதற்கான அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தியதுடன் எதிர்வரும் ஆண்டுகளில் கூட்டுறவு முயற்சிகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.