78வது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான ஊடக சந்திப்பில்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
ஜனவரி 29, 2026
78வது தேசிய சுதந்திர தின விழாவின் ஏற்பாடுகள் குறித்து விளக்கும் ஊடக சந்திப்பு இன்று (29 ஜனவரி) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கெளரவ A. H. M. H. அபேரத்ன, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. ஆலோக பண்டார, முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் (IGP) உள்ளிட்ட பல சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 2026 பிப்ரவரி 04 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள 78வது தேசிய சுதந்திர தின விழாவில் முப்படைகள் மேற்கொள்ளவுள்ள பங்கேற்பு தொடர்பான விவரங்களை வெளியிட்டார்.
அதற்கமைய, இலங்கை இராணுவம், கடற்படை விமானப்படை மற்றும் தேசிய மாணவர் படையணி (NCC) ஆகியவை அணிவகுப்பு பிரிவுகள், இசைக்குழுக்கள், கலாச்சார அங்கங்கள் மற்றும் அத்தியாவசிய ஆதரவு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பங்களிப்புகளை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இலங்கை கடற்படை காலிமுகத்திடலில் பாரம்பரிய பீரங்கி வேட்டு மரியாதை மற்றும் கடற்படை கப்பல் 'ஸயுற' வின் அணிவகுப்பையும் நிகழ்த்தவுள்ளதாகவும், இலங்கை விமானப்படை 412 மற்றும் 212 வகை ஹெலிகொப்டர்கள் தேசியக் கொடியை ஏந்திய வான்பறப்பு (Fly-past) நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
விழா சிறப்பாக மற்றும் ஒழுங்காக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜனவரி 30 முதல் பிப்ரவரி 02 வரை முழு அணிவகுப்பு பயிற்சிகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதான விழா பிப்ரவரி 4 ஆம் திகதி காலை, மாண்புமிகு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கு மேலதிகமாக “சுத்தமான இலங்கை” (Clean Sri Lanka) நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்த பல்வேறு சமூக சேவை திட்டங்களையும் முப்படைகள் முன்னெடுக்கவுள்ளன என்றும், இது, தேசிய அபிவிருத்தி, மற்றும் பொது நலச் சேவையில் அவர்களின் வகிபாகத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமையும் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.