அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
ஜனவரி 29, 2026இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேதகு மேத்யூ டக்வர்த், இன்று (ஜனவரி 29 ) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இன்று நடைபெற்ற இந்த சுமூகமான சந்திப்பில், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிவுக்கு இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மை தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
உயர்ஸ்தானிகரை வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் அவுஸ்திரேலியா நீண்ட காலமாக வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு இலங்கையின் நன்றியைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் பொதுவான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதியையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இக் கலந்துரையாடலின் போது, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட பீச்கிராஃப்ட் கிங் எயார் 350 கடல்சார் கண்காணிப்பு விமானம் உள்ளிட்ட அவுஸ்திரேலியாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார். இவ்விமானம் நாட்டின் கடல்சார் கண்காணிப்பு திறனை கணிசமாக மேம்படுத்த உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இலங்கை கடற்படை நீர்வரைவியல் சேவையின் திறன்களை வலுப்படுத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் ஆதரவும், முன்பு வழங்கப்பட்ட கப்பல்கள் மற்றும் இலங்கை முப்படைகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் பயிற்சி நிகழ்ச்சிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக திறன் மேம்பாடு, பயிற்சி, சமூக ஈடுபாடு, தொழில்நுட்ப மற்றும் உபகரண ஆதரவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது கூட்டு உறுதியை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இச்சந்திப்பு, பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட மூலோபாய நலன்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு, நிலைத்தன்மை குறித்த பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகியுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலியவுக்கு இடையிலான வலுவான மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு கூட்டாண்மையை பிரதிபலிப்பதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.