PDNA கருத்தரங்கில் தாங்குதிறன்மிக்க மீட்சிக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தினார்
பெப்ரவரி 09, 2026‘டிட்வா’சூறாவளியின் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post-Disaster Needs Assessment – PDNA) தொடர்பான அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் இறுதிப்படுத்தல் பணிமனை இன்று (பெப்ரவரி 9) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இந்நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
இந்தப் பணிமனை, இலங்கையின் அனர்த்தத்திற்கு பிந்தைய மீட்பு செயல்முறையில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்க தேவையான மதிப்பீடுகளை இறுதிப்படுத்தும் நோக்கில், இதனுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 2025 நவம்பர் மாதத்தில் PDNA செயல்முறை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தொழில்நுட்ப குழுக்கள் அனர்த்தத்தின் தாக்கங்களை அளவிடும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது. அவற்றின் கண்டறிதல்களைச் சரிபார்த்து மேம்படுத்தும் தளமாக இப்பணிமனை செயல்பட்டதுடன், இறுதி PDNA அறிக்கை வெளியீட்டிற்கும் உதவுவதாகவும் அமையும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், ‘டிட்வா’ சூறாவளி மனித உயிர்கள், உட்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அதிலிருந்து தாங்குதிறன் மிக்க மீட்பை நோக்கி நகர PDNA ஒரு முக்கிய அடித்தளமாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டார். ஜனாதிபதி தலைமையிலான ‘இலங்கையை மீளமைக்கும் பணிக்குழு’ வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆதாரம்சார் மதிப்பீடு, அவசர நிவாரணத்திலிருந்து ஒருங்கிணைந்த, அபாயத்தை கருத்தில் கொண்ட மீட்பு கட்டமைப்புக்குத் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும், அது “Build Back Better” என்ற உலகளாவிய கோட்பாடுகளுடன் ஒத்திணைந்ததாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சிக்கலான மற்றும் குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டிய செயல்முறையை திறம்பட வழிநடத்திய தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும் (DMC) பாதுகாப்புச் செயலாளர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் ஐக்கிய நாடுகள் (UN) அமைப்புகள் வழங்கிய தொழில்நுட்ப நிபுணத்துவமும் நிதி ஆதரவும், இந்த மதிப்பீட்டின் சர்வதேச ஒத்திணைவு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், சவாலான சூழ்நிலைகளிலும் துறை ரீதியான துல்லியமான தரவுகளை வழங்கிய தொழில்நுட்ப குழுக்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இறுதியாக, PDNA முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் பாதுகாப்பு அமைச்சின் முழுமையான அர்ப்பணிப்பை பாதுகாப்புச் செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், மீட்பு முன்னுரிமைகள் களமட்ட யதார்த்தங்களை பிரதிபலிப்பதை உறுதி செய்ய இப்பணிமனை ஒரு முக்கிய மைல்கல்லாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். “வலுவான நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்ச்சியான கூட்டாண்மைகள் மூலம், ‘டிட்வா’வின் தாக்கங்களிலிருந்து இலங்கை மேலும் வலிமையான, பாதுகாப்பான மற்றும் தாங்குதிறன் மிக்க நாடாக உருவெடுக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.
இந்தப் கருத்தரங்கில், ஜனாதிபதி பணிக்குழுவின் செயலாளர், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர் (UNRC), ஐ.நா. அபிவிருத்தி பங்காளி நிறுவனங்கள், தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள், மேலும் தேசிய திட்டமிடல் திணைக்கள மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்களும் கலந்துக் கொண்டனர்.