இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையிலான பாதுகாப்பு
ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்த உறுதி
பெப்ரவரி 14, 2026
ரியாத்தில் உள்ள Ministry of National Guard- இல் நடைபெற்ற உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் சவுதி அரேபியா இராச்சியம் பாதுகாப்புத் துறையில் தங்களின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதியளித்துள்ளன.
கடந்த வாரம் (09 பெப்ரவரி) நடைபெற்ற இச் சந்திப்பில், இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவுதி அரேபிய தேசிய காவல் படையின் பிரதி அமைச்சர் Dr. Nasser bin Abdulaziz Al-Dawood, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு, பிரதி அமைச்சரின் World Defense Show 2026 க்கு உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாக இடம்பெற்றது.
பாதுகாப்புத் துறையில் பரஸ்பர புரிதலை மேம்படுத்தி, எதிர்கால ஒத்துழைப்பிற்கான பாதையை வகுப்பதே இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது.
இதன் போது, மேஜர் ஜெனரல் ஜயசேகர, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் சுமூக மற்றும் நட்புறவான இருதரப்பு உறவுகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார். பரஸ்பர ஆர்வம் கொண்ட துறைகளில் தொடர்ந்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை வழங்குமாறு இலங்கை தரப்பு கோரியதுடன், இந்த நீண்டநாள் கூட்டுறவை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்தையும் வலியுறுத்தியது.
கலந்துரையாடலின் போது கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பிராந்தியத்தில் உருவாகும் பாதுகாப்புச் சவால்கள், குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டன.
இத்தகைய எல்லை தாண்டிய குற்றச்செயல்களை திறம்பட எதிர்கொள்வதற்காக மேம்பட்ட ஒருங்கிணைப்பு அவசியம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.
பாதுகாப்புத் துறையின் எதிர்காலம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. உருவாகி வரும் பாதுகாப்பு போக்குகள் மற்றும் கொள்கைகள், நவீன பாதுகாப்பு மூலோபாயங்கள், மாறிவரும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நவீன பாதுகாப்பு கருப்பொருட்கள் பற்றியும் இரு தரப்பும் கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.
எதிர்காலத்தை நோக்கி, நிறுவன ரீதியான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதில் இரு தரப்பினரும் வலுவான பரஸ்பர ஆர்வத்தை வெளிப்படுத்தினர். திட்டமிட்ட பாதுகாப்பு கலந்துரையாடல்கள் மற்றும் பணியாளர் மட்ட கலந்துரையாடல்கள் உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு ஈடுபாடுகளை எதிர்காலத்தில் ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன. அதேபோல், திறன் மேம்பாட்டு திட்டங்களை நிறுவுவதும், பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பதும் எதிர்கால ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சுமூக சந்திப்பின் முடிவில் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் Dr. Nasser bin Abdulaziz Al-Dawood, இருவரும் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களின் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.