கடற்படை திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் முயற்சிகள்

பெப்ரவரி 15, 2026

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), உலக பாதுகாப்பு கண்காட்சி (World Defence Show – WDS) 2026 ற்கு மேற்கொண்ட உத்தியோபூர்வ விஜயத்தின் போது, சவூதி அரேபியா இராச்சியத்தின் பாதுகாப்பு படை பிரதம அதிகாரி Vice Admiral Fahad Al Ghofaily, அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பில் இருநாடுகளுக்கிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. சமீபத்திய டித்வா அனர்த்தத்தின் போது சவூதி அரேபியா வழங்கிய உதவிக்கு இலங்கை தரப்பு தனது நன்றியைத் தெரிவித்தது.

தொழில்முறை ரீதியிலான இராணுவ பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இருதரப்பும் வலியுறுத்தியதுடன், அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல்கள் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு நிகழ்வுகளில் பங்கேற்பு வாயிலாக ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவர்கள் ஒத்துக்கொண்டனர். இம்முயற்சிகள் மூலம் இருநாடுகளின் ஆயுதப்படைகளுக்கிடையில் செயல்திறன் அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகள் பரிமாறப்படவுள்ளன.

மேலும், இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அத்துடன் இலங்கை கடற்படையின் கண்காணிப்பு திறன்கள் மற்றும் ஆழ்கடல் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்த உதவிகளைப் பெறுதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இத்திறன் மேம்பாட்டு முயற்சிகள் சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும், உருவாகிவரும் பாதுகாப்பு சவால்களுக்கு திறம்பட பதிலளிக்கவும் உதவியளிக்கும்.

அத்துடன் சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், நிறுவன ரீதியிலான நெருங்கிய ஒத்துழைப்பை நிலைநிறுத்தவும் இருதரப்பும் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.