ரஷ்யாவின் “தாய்நாட்டின் பாதுகாவலர் தினம்” விழாவில் பாதுகாப்பு பிரதி
அமைச்சர் கலந்துகொண்டார்

பெப்ரவரி 20, 2026

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), நேற்று (பெப்ரவரி 19 ) கொழும்பு Cinnamon Life, City of Dreams ஹோட்டலில் நடைபெற்ற ரஷ்யாவின் “தாய்நாட்டின் பாதுகாவலர் தினம்” விழாவில் கலந்துகொண்டார். இந்நிகழ்வு கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.“தாய்நாட்டின் பாதுகாவலர் தினம்” என்பது ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப்படைகளில் சேவை செய்த முன்னாள் வீரர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் போற்றப்படும் ஒரு விசேடமான நாளாகும்.

இந்நிகழ்வில், இலங்கைக்கான ரஷ்ய தூதுதர் அதிமேதகு Levan S Dzhagaryan அவர்கள், இரு நாடுகளுக்கிடையேயான நட்பும் ஒத்துழைப்பும் கொண்ட வலுவான உறவை வலியுறுத்தினார்.

இங்கு உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், ரஷ்யாவுக்கும் இலங்கையும் இடையிலான நீடித்த வளர்ச்சியடைந்தும் வரும் உறவை எடுத்துக்காட்டினார். 1957 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கிடையில் ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.வர்த்தகம், பொருளாதாரம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான இராஜாங்க ஆணைக்குழுவின் மூலம் பல துறைகளில் ரஷ்யா வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு அவர் நன்றியைத் தெரிவித்தார். இவ்வாணைக்குழு இருதரப்பு தொடர்புகளை கட்டமைப்புடன் முன்னெடுக்கும் ஒரு முக்கிய செயல்முறையாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த வணிக கவுன்சில்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளையும், மக்களிடையே உறவை வலுப்படுத்தும் பண்பாட்டு பரிமாற்றத் திட்டங்களையும் அவர் பாராட்டினார்.

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட தேசிய அனர்த்தத்தின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிக்காக ரஷ்ய மக்களுக்குத் தனது நன்றியை பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்கால வாய்ப்புகளை முன்னிறுத்திய அவர், ரஷ்யாவின் தொழில்நுட்ப மற்றும் ஆற்றல் நிபுணத்துவத்தையும் இலங்கையின் போக்குவரத்து திறன்களையும் கடல் உட்கட்டமைப்பையும் ஒருங்கிணைத்துப் பல துறைகளில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன எனக் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ரஷ்ய தூதரக விமான மற்றும் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் செர்கெய் பெலியான்கின், விமானப்படை தளபதி, வெளிநாட்டு ராஜதந்திரிகள் , முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.