சவூதி அரேபியாவின் ஸ்தாபக தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பங்கேற்பு
பெப்ரவரி 21, 2026இலங்கையில் உள்ள சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதரகம், அந்நாட்டின் 1727 ஆம் ஆண்டிலிருந்து 298 ஆண்டுகால வரலாற்றை நினைவுகூரும் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு, கொழும்பு ITC Ratnadeepa Hotel இல் நேற்று (20 பெப்ரவரி) ஒரு வரவேற்பு விழாவை நிகழ்த்தியது.
இவ்விழாவில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் Dr. நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையிலான உறுதியான மற்றும் நட்புறவு தொடர்புகளுக்கான தொடர்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.
நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி வரவேற்றார்.
தமது வரவேற்புரையில், தூதுவர், இரு நாடுகளுக்கிடையிலான நீடித்த இருதரப்பு உறவை வலியுறுத்தியதுடன், முக்கிய துறைகளில் முன்னெடுத்து வரும் ஒத்துழைப்பை எடுத்துரைத்தார். தூதரக, பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த சவூதி அரேபியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில், 1974 ஆம் ஆண்டு தொடங்கிய சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையிலான 51 ஆண்டுகால தூதரக உறவினை நினைவு கூர்ந்தார். கடந்த ஐந்து தசாப்தங்களில் வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் கலாசார பரிமாற்றம் ஆகிய துறைகளில் வலுவான அடித்தளத்தை இரு நாடுகளும் உருவாக்கியுள்ளன என அவர் குறிப்பிட்டார். எதிர்கால தலைமுறைகளுக்காக இருதரப்பு நன்மை பயக்கும் உறவுகளை தொடர்ச்சியாக நிலைநிறுத்தி மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்விற்கு வெளிநாட்டு ராஜதந்திரிகள், அமைச்சர்கள், மற்றும் பல உயர்மட்ட பிரமுகர்கள் சமூகமளித்திருந்தனர்.