போர்வீரர்கள் எதிர்கொள்ளும் நிலப் பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்பு பிரதி
அமைச்சர் தலைமையில் சிறப்பு கலந்துரையாடல்

பெப்ரவரி 24, 2026

போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் எதிர்நோக்கும் நிலம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (24 பெப்ரவரி) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையேற்றார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் போர்வீரர் சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணியகத்தினால் அடையாளம் காணப்பட்ட நிலப் பிரச்சினைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

போர்வீரர்கள் நாட்டின் இறையாண்மையையும் நிலையான அமைதியையும் பாதுகாக்கச் செய்த அர்ப்பணிப்பை மதித்து, அரசாங்கம் நில சீர்திருத்த ஆணைக்குழு மூலமாக நிலங்களை வழங்கும் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பில் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஹோமாகம பிரதேச செயலாளர் பிரிவின் மீகொடவத்த மற்றும் பலெந்தகொட, மத்துகம பிரதேச செயலாளர் பிரிவின் யடடோலவத்த, மொனராகலை பிரதேச செயலாளர் பிரிவின் மதுருகெட்டியவத்த ஆகிய பகுதிகளில் நிலப்பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலங்களுடன் தொடர்புடைய நிலுவையில் உள்ள பிரச்சினைகள் இக்கூட்டத்தில் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டன.

போர்வீரர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் உரிமையை உறுதிப்படுத்த தேவையான சட்டப்பூர்வ ஆவணங்கள் வழங்குவதை விரைவுபடுத்துதல், மூன்றாம் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற விவசாயம் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இங்கு கருத்து வெளியிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், அரசாங்க தலையீட்டின் மூலம் வழங்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு சேவைகள்), நிலா சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிராந்திய பணிப்பாளர்கள், மேலும் இராணுவ போர்வீரர் சேவைகள் மற்றும் மறுவாழ்வு பிரிவின் பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.