‘டிட்வா’ புயலுக்குப் பிந்தைய கட்டமைக்கப்பட்ட தேசிய மீட்பிற்கான அடித்தளத்தை அமைத்தல் தொடர்பான PDNA கூட்டம் நடைபெற்றது

பெப்ரவரி 27, 2026

‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீட்டு செயல்முறை (Post Disaster Needs Assessment – PDNA) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) தலைமையில், தேசிய திட்டமிடல் திணைக்களம் (NPD) மற்றும் முக்கிய தேசிய, சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த செயல்முறையின் கீழ், பாதிக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட உட்கட்டமைப்பு சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த தரவுகள் திட்டமிட்ட கால அட்டவணைக்கு அமைவாக முறையாகச் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்யப்படுகின்றன.இது தொடர்பாக, PDNA குழு இன்று (27 பெப்ரவரி) பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கூட்டமொன்றை நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமை தாங்கினார்.

ஆதாரபூர்வமான மதிப்பீடுகளை அங்கீகரித்து, முழுமையான தேசிய மீட்பு வடிவமைப்பை உருவாக்குவது குறித்தும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.மேலும், மீளமைப்பு நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்புக்குள்ளான மக்களிடம் துல்லியமாகச் சென்றடைய, தரவுகளின் நம்பகத்தன்மை மிக முக்கியமானது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

சரிபார்க்கப்பட்ட அறிக்கை, நிலைத்தன்மை கொண்ட அபிவிருத்தி நோக்கில் இலங்கையின் மாற்றத்திற்கான உத்தியோகபூர்வ வழிகாட்டி ஆவணமாக அமையும். அனர்த்தத்தின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட கல்வி, சுகாதாரம் மற்றும் குடிநீர், சுகாதார வசதிகள் (WASH) உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மீளமைக்க தேவையான நிதி விவரங்களை விரிவாக இவ்வறிக்கை முன்வைக்கிறது.

தேசிய அனர்த்த மறுசீரமைப்பிற்கான வரவுத் திட்டத்துக்கு வழிகாட்டியாக இருக்கும் இறுதி PDNA அறிக்கை 2026 மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாக கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர்.