இங்கிலாந்து மன்னர் அதிமேதகு சார்ல்ஸ் III அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

மார்ச் 06, 2026

இங்கிலாந்து மன்னர் அதிமேதகு சார்ல்ஸ் III அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (மார்ச் 05) கொழும்பு ITC ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கலந்து கொண்டனர்.

நாட்டின் பாதுகாப்பு அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இவர்கள் இங்கிலாந்து மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். 

இந்நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் கௌரவ ஹர்ஷண நானயக்கார பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வருகை தந்த அதிதிகளை, இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் மேன்மைத் திரு Andrew Patrick வரவேற்றார்.

தமது வரவேற்பு உரையில் உயர்ஸ்தானிகர், இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால உறவை வலியுறுத்தி, பல முக்கிய துறைகளில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பை சுட்டிக்காட்டினார். மேலும், இருநாடுகளுக்கிடையிலான தூதரக, பொருளாதார மற்றும் பண்பாட்டு கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கத்துடன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஐக்கிய இராச்சியத்தின் உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், சிரேஷ்ட அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வரவேற்பு நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால தூதரக உறவுகளையும் வலுவான கூட்டாண்மையையும் பிரதிபலிக்கும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது.