--> -->

கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதியை ஜனாதிபதி கையேற்றார்

ஜனவரி 28, 2021

இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையேற்றார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்றைய தினம் கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி ஒக்ஸ்போர்டு அஸ்ட்ராஸெனகா கொவிட்ஷீல்ட் தடுப்பூசிகளை ஜனாதிபதி இவ்வாறு பெற்றுக்கொண்டார்.

இந்த தடுப்பூசிகளை இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கலாநிதி கோபால் பக்லே ஜனாதிபதியிடம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட விஷேட வேண்டுகோளுக்கு அமைய இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் ஏ1 281 எனும் இந்திய விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையில் நிலவும் நீண்டகால ஆரோக்கியமான உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் பிரதிபலிப்பாகவே இந்த தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசிகள், கொவிட் 19 தடுப்பு பணிகளில் முன்னணியில் செயற்படும் சுகாதார ஊழியர்கள், முப்படை வீரர்கள், பொலிஸார் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏற்றப்படவுள்ளன.

கொவிட் தடுப்பூசிகளை கை ஏற்கும் இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பிரதான ஜனாதிபதி ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர், கொழும்பு விமான நிலையத்தின் தலைவர், கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, இராணுவ தளபதி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

மேலும், இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் ஜனாதிபதியினால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - www.army.lk