--> -->

பாதுகாப்பு செயலாளர் கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்திற்கு விஜயம்

மார்ச் 04, 2021

பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்திற்கு நேற்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளரை கடலோர பாதுகாப்புப்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர். மேலும் தலைமையகத்திற்கு வருகைதந்த பாதுகாப்பு செயலாளருக்கு மரியாதை அணிவகுப்பு அளிக்கக்கப்பட்டது.

இந்த விஜயத்தில் கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, கடலோர பாதுகாப்புப்படையின் எதிர்கால திட்டங்கள், தேவைப்பாடுகள் உட்பட அதன் முன்னேற்றம் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஏகநாயக்கவின் அழைப்பின் பேரில் கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட முழுமையான உடற்பயிற்சி கூடம் ஒன்றையும் பாதுகாப்பு செயலாளர் திறந்து வைத்தார்.

இலங்கை கடலோர பாதுகாப்புப்படை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் முதன்மையான கடல்சார் சட்ட அமுலாக்க நிறுவனமாகும்.

கரையோரப் பிரதேசங்கள், கடல் வலயங்கள், கடல் பரப்புகள் மற்றும் நாட்டின் நீர் வளங்கள் பாதுகாக்கும் பொறுப்புக்கள் இலங்கை கடலோர பாதுகாப்புப்படைக்கு ஒப்படைக்கப்பட்ட பின்னர் சட்டவிரோத க் குடியேற்றவாசிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உள்ளே நுழைவதை தடுப்பதற்கும் வெளியேறுவதற்கும் போதைப் பொருட் கடத்தல்கள் உள்ளிட்ட கடத்தல் நடவடிக்கைகள் பல முறியடிக்கப்பட்டுள்ளன.

கடலில் இடர்களுக்கு முகம்கொடுக்கும் கப்பல்களுக்கு உதவி செய்தல், கடல் சார் சூழல் பாதுகாப்பு, கடல் வாழ் உயிரினப் பாதுகாப்பு, கடல் அனர்த்தங்களை தடுத்தல் போன்ற உதவிகளையும் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த விஜயத்தை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு செயலளர் மற்றும் கடலோர பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இதேவேளை, இலங்கை கடலோர பாதுகாப்புப்படை தனது 11வது ஆண்டு நிறைவை இன்றையதினம் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.