--> -->

அவுஸ்திரேலிய கடற்படை கப்பல்கள் இலங்கையில்

மார்ச் 25, 2019

ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான எச்எம்ஏஎஸ் “கென்பரா”, எச்எம்ஏஎஸ் “நியுகாசல்”, எச்எம்ஏஎஸ் “சக்ஸஸ்” மற்றும் எச்எம்ஏஎஸ் “பர்ரமட்ட” ஆகிய நான்கு கப்பல்களும் இந்து – பசுபிக் எண்டீவர் – 2019 இல் பங்கேற்பதற்காக சனிக்கிழமையன்று (மார்ச், 23) இலங்கை வந்தடைந்தன.

எச் எம் ஏ எஸ் “கென்பரா”, எச் எம் ஏ எஸ் “நியூகேஸில்”, ஆகிய இருகப்பல்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைத்த அதவேளை, எச் எம் ஏ எஸ் “சக்ஸஸ்” மற்றும் எச் எம் ஏ எஸ் “பர்ரமட்ட” ஆகிய இரு கப்பல்களும் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இவ்விரு துறைமுகங்களுக்கும் வருகை தந்த குறித்த இக் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் ஒன்றிணைந்த விஷேட செயலணியினர் இங்கு வருகை தந்துள்ளனர். மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண செயற்பாடுகள், உலங்குவானூர்தி பரிமாற்ற நடவடிக்கை, கடல்சார் விழிப்புணர்வு நடவடிக்கைகள், பேன்ட் வாத்திய போட்டிகள், விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் இரு நாட்டு படைவீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

230.9மீட்டர் நீளம் மற்றும் 7.9 மீட்டர் அகலம் கொண்ட எச்எம்ஏஎஸ் “கென்பரா” கப்பலின் எடை சுமார் 27500 தொன்களாகும். இக் கப்பலில் 483 கடற்படை வீரர்கள் தரித்திருக்கும் வசதிகளை கொண்டுள்ளது. இதேவேளை 138.1மீட்டர் நீளம் மற்றும் 7.9 மீட்டர் அகலம் கொண்ட எச்எம்ஏஎஸ் நியுகாசல் கப்பலில் 205 கடற்படை வீரர்கள் தரித்திருக்கும் வசதிகள் காணப்படுகின்றது.

157.2 மீட்டர் நீளம் மற்றும் 8.4 மீட்டர் அகலம் கொண்ட எச்எம்ஏஎஸ் “சக்ஸஸ்” கப்பலின் எடை சுமார் 17900 தொன்களாகும். இக் கப்பலில் 178 கடற்படை வீரர்கள் தரித்திருக்கும் வசதிகளை கொண்டுள்ளது. இதேவேளை 118 மீட்டர் நீளம் மற்றும்6.2 மீட்டர் அகலம் கொண்ட எச்எம்ஏஎஸ் பர்ரமட்ட கப்பலில் 190 கடற்படை வீரர்கள் தரித்திருக்கும் வசதிகள் காணப்படுகின்றது.

இம்மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை எச் எம் ஏ எஸ் “சக்ஸஸ்” மற்றும் எச் எம் ஏ எஸ் “பர்ரமட்ட” ஆகிய இரு கப்பல்களும் நாட்டை விட்டு புறப்படும் அதேவேளை, எச் எம் ஏ எஸ் “கென்பரா”, எச் எம் ஏ எஸ் “நியூகேஸில்”, ஆகிய இருகப்பல்களும் இம்மாதம் 30ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.