--> -->

திஸ்ஸமகாராமவில் சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள், இராணுவத்தினர் பயன்படுத்தும் உருமறைப்பு சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பான ஊடக அறிக்கை

ஜூன் 29, 2021

திஸ்ஸமகாராம, திஸ்ஸவெவ வாவியில் மண் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள், இராணுவத்தினர் பயன்படுத்தும் உருமறைப்பு சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களினால் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திடம் வினவியபோது அதற்கு பதிலளித்த சீன தூதரகம், குறித்த தொழிலாளர்கள், சீன இராணுவத்தை சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் அவர்கள் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் எனவும் அவர்கள் பயன்படுத்திய ஆடை சீன இராணுவத்துக்கோ அல்லது ஏதேனும் இராணுவ அமைப்புக்கோ சொந்தமானது அல்ல எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது எழுந்துள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை அணிவதைத் தவிர்க்குமாறு இலங்கைக்கான சீன தூதரகத்தினால் குறித்த பகுதியில் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பங்குதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் பணிகளில் ஈடுபடுகின்றபோது இந்த வகை உடைகளை அணிவதிலிருந்து தவிர்ந்து கொள்வது குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.