--> -->

இந்திய கடலோர பாதுகாப்பு படை இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு உதிரி பாகங்கள் வழங்கி உதவி

ஜூலை 01, 2021

இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் திரு வினோத் ஜேக்கப், இலங்கை கடலோர பாதுகாப்புப்படை பிராந்திய தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன் போது அவர் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான சுரக்ஷா கப்பலுக்கான உதிரிபாகங்களை உத்தியோக பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

பிராந்திய தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய பிரதி உயர்ஸ்தானிகரை இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க வரவேற்றார்.

இந்திய கடலோர பாதுகாப்பு படையால் முன்னர் பயன்படுத்தபட்ட  விக்ரம் ரக  ஆழ்கடல் ரோந்து கப்பல் 2017ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டு குறித்த கப்பல் 'இலங்கை கடலோர பாதுகாப்பு படை கப்பல் சுரக்ஷா' என அதிகாரம் அளிக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

அன்பளிப்பாக அளிக்கப்பட்டது முதல் இந்த கப்பலின் இயங்கு திறனை அதிகரிக்கும் வகையில் அதற்கான உதிரிப்பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் வழங்கப்பட்டு வருவதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மேலும் ஒரு தொகை இயந்திர உதிரி பாகங்கள் பரி மாற்றப்பட்டுள்ளது.

இந்த கையளிப்பு நிகழ்வில், குறித்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.