--> -->

இராணுவத்தினரால் கொவிட் நோயாளிகளை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையம் பிந்துனுவெவவில் ஸ்தாபிப்பு

ஆகஸ்ட் 18, 2021

பண்டாரவெல பிந்துனுவெவ இளைஞர் சேவை மன்றம் கட்டிடம் கொவிட் - 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கொவிட் - 19 நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த இடைநிலை பராமரிப்பு நிலையம் மத்திய பாதுகாப்பு தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் விகும் லியனகேவினால் சுகாதார அதிகாரிகளிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.

இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் கொவிட் - 19 தொற்றுக்குள்ளான 311 நோயாளர்களை பராமரிப்பதற்கான சகல மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு நிலையத்திற்கு தேவையான கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகள் ஆகியவை கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமாக ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் வழங்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படைவீரர்களினால் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.