கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விமானப்படையினரால் ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் வழங்கி வைப்பு

செப்டம்பர் 01, 2021

சமூக ஆரோக்கியம் சார்ந்த கருவிகள் உற்பத்தி தொடர்ந்து முன்னெடுப்பு

இலங்கை விமானப் படையினரால்  முன்னெடுக்கப்பட்டுவரும் சுகாதார பணிகளில் ஒரு பகுதியாக விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு  ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் அங்கோடைதேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனம் ஆகியவற்றுக்கு  நேற்று (ஆகஸ்ட், 31) கையளிக்கப்பட்டன.

இதற்கமைய,  ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்களை கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் இரைப்பை-குடல் அறுவை சிகிச்சை நிபுணர் விஷேட வைத்தியர் ஹர்ஷ கமகே மற்றும் தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சிந்தா சூரியாராச்சி ஆகியோரிடம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவினால் கையளிக்கப்பட்டன.

கொவிட் -19 நோயாளிகளின் பயன்பாட்டிற்கென இந்த  ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விமானப்படை சுகாதார சேவைகள் பணிப்பாளர் எயார்  வைஸ் மார்ஷல் (டாக்டர்) லலித் ஜயவீர மற்றும் பொது பொறியியலாளர் பிரிவின் எயார் கொமடோர் பிரசன்ன ரணசிங்க ஆகியோர் கலந்து கொண்டார்.