--> -->

சிவில் பாதுகாப்புப்படை திணைக்களம் தனது 15வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகின்றது

செப்டம்பர் 13, 2021

தனது விவசாயத் திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ள சிவில் பாதுகாப்புப்படை திணைக்களம் இன்று (செப்டம்பர், 13) அதன் 15 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

சிவில் பாதுகாப்புப் படை திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லாமஹேவகே(ஓய்வு) தலைமையில் சுமார் 35,000 சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியாற்றுகின்றனர். சிவில் பாதுகாப்புப் படை திணைக்களத்திற்கு நாடு முழுவதிலும் 24 பிராந்திய தலைமையகங்கள் காணப்படுகின்றன.


இந்தத் திணைக்களம், பெரும்பாலும் விவசாயம், செங்கல் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ள அதேவேளை, பல்வேறு விவசாய அடிப்படையிலான தயாரிப்புகளையும் உற்பத்தி செய்கின்றது.

புனித மதஸ்தலங்கள் மற்றும் தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களை பராமரித்தல், வளம்பொருந்திய இலங்கையின் பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகியவை அவற்றின் கடமைகளில் ஒன்றாகும்.

1980களின் நடுப்பகுதியில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட 'தேசிய உள்ளூர் பாதுகாப்பு சேவை' ஆனது, போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிவில் பாதுகாப்புப் படை திணைக்களமாக அதன் சிறகுகளை விரித்து நாட்டிற்கு ஈடு இணையற்ற சேவையை வழங்கி வருகின்றது.

மறுசீரமைக்கப்பட்ட இந்த திணைக்களம், 2006 செப்டம்பர் 13ம் திகதி, நாட்டின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷவினால் ஓய்வூதிய பலன்களை பெற்றுக்கொள்ளும் தகுதியளிக்கப்பட்டது.

போரின் போது, ​​545 சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ள அதேவேளை, 425 பேர் அங்கவீனமுற்றள்ளனர்.

அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய , நாட்டின் அபிவிருத்தி மற்றும் விவசாய அடிப்படையிலான நிலையான வளர்ச்சித் திட்டங்களில் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.