79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

செப்டம்பர் 15, 2021

தலைமன்னார், உருமலைப் பிரதேசத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர்,14) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின்போது ஒரு தொகை ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

இதற்கமைய, நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கடற் படையினரால் முறியடிக்கப்பட்டு சுமார் 09 கிலோ 914 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள போதை பொருளின் சந்தைப் பெறுமதி 79 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேகநபர்கள் தலைமன்னார் உருமலைப் பிரதேசத்தில் வசிக்கும் 28 தொடக்கம் 37 வரையான வயதுகளை உடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சந்தேக நபர்கள், போதை பொருள் மற்றும் படகு சகிதம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.